Tuesday, December 14, 2004

MS சுப்புலஷ்மி - அஞ்சலி

மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி --- 1916-2004

உலகமே அவருக்கு அஞ்சலி செலுத்தி முடித்து விட்ட வேளையில், எனக்கு அவரைப் பற்றி என் வலைப்பதிவில் சில விஷயங்களை பதிய வேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவின் இறுதியில், என் நண்பர் திரு.தேசிகனின் MS-உடனான ஒரு சிறு சந்திப்பை அவரே சொல்ல அதை வெளியிட்டிருக்கிறேன்.

எப்பேர்ப்பட்ட இசைப்பெரும்பொக்கிஷம் அவர்? அவரது தெய்வீகக் குரல் வாயிலாகத் தான், நான் வெங்கடேச சுப்ரபாதமும், விஷ்ணு ஸகஸ்ரநாமமும் பிழையறச் சொல்ல கற்றுக் கொண்டேன்! அவரது அன்னமாச்சார்யா கீர்த்தனைகளை, மனதில் குழப்பமோ வேதனையோ நிலவிய தருணங்களில், எத்தனை முறை கேட்டு அமைதி அடைந்திருக்கிறேன்! முக்கியமாக, 'பாவமுலோன, பாக்யமு நந்துலு' மற்றும் 'நானாட்டி பதுகு நாடகமு, கானக கன்னதி கைவல்யமு' ஆகியவை.

உள்ளத்தை உருக்கும், பக்தி ரஸம் சொட்டும் அவரது மீராபஜன், ஸ்ரீரங்கபுர விஹாரா, பஜகோவிந்தம் ஆகியவற்றை பலமுறை கேட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். 'காற்றினிலே வரும் கீதம்' பாடலில் அவர் தேன்குரலில் தவழ்ந்து வரும் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட ஓரிசையில் (transcendence) லயிக்காத உயிரும் உண்டோ ? குறையொன்றும் இல்லாதவனைப் பற்றி அவர் பாடிய 'குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கண்ணா" வைக் கேட்டு நெஞ்சம் நெகிழாதாரும் உண்டோ ?

அவருடைய படல்களில் இருந்த சுருதி/வாக்சுத்தமும் சௌக்யமும் அனுபவிப்பதற்கு, கர்னாடக சங்கீதம் பயின்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரது நெஞ்சை உருக்கும் இசையின் வீச்சை, அவர் குரல் பட்டிதொட்டிகளிலெல்லாம் (கோயில் முதல் டீக்கடை வரை) ஒலித்ததன் மூலம் உணரலாம். பலதரப்பட்ட மக்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரல் வாயிலாக மயக்கி தன் கட்டுக்குள் வைத்திருந்தார் அந்த இசை சகாப்தம்! மகாத்மா காந்தி விரும்பிய 'வைஷ்ணவ ஜனதோ' பஜன் MS-இன் குரல் வாயிலாக பிரசத்தி பெற்றது! தன்னுடைய இசையால் மொழி வழித் தடைகளை உடைத்தெறிந்தவர் அவர்! திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் விண்ணப்பத்திற்கு இணங்கி, MS தனது 63-வது வயதில், தெலுங்கு கற்று, அதன் தொடர்ச்சியாக, பாலாஜி பஞ்சரத்னமாலா, அன்னமாச்சார்யா சங்கீர்த்தனைகளும் கூடிய ஒரு உன்னத இசைமாலையை தொடுத்து வேங்கடேசப் பெருமானுக்கு சூட்டினார்! பக்தியாலும், உழைப்பாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு MS ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.

மகாத்மாவே ஒரு முறை கூறியது போல், MS பாடும்போது, அவர் கடவுளுக்கு அருகில் செல்வதோடு மட்டுமல்லாமல், கேட்பவரையும் அதே பரவச நிலைக்குக் கூட்டிச் சென்று விடுவார்! அது அவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று! பக்தியும் பாவமும் மேலோங்கும் அவரது மீராபஜன் இதற்கு ஒரு சிறந்த சான்று. பண்டித நேரு ஒரு முறை அவர் பாடலில் லயித்து "Who am I, a mere Prime minister, in front of the Queen of Music?" என்று கூறியிருக்கிறார். இசை வல்லுனர்கள் பலரும் கூட தேவகானம் பாடிய தேவதையாகவே அவரை கண்டார்கள். செம்மங்குடியிடம் அவருக்கிருந்த குருபக்தி அபாரமானது என்று பலரும் போற்றுவர். செம்மங்குடியே, MS-இன் குரல் சுருதியுடன் குழைந்து கலக்கும் விதத்தை, வெண்ணெய் நெய்யாக உருகுவதுடன் ஒப்பிட்டு அந்த சுகானுபவத்தை வர்ணிப்பது கடினம் என்று கூறியிருக்கிறார்!!!

இவற்றுக்கெல்லாம் மேலாக நான் கருதும் விஷயம், அவரது ஒப்பிலா மனிதநேயமே. எண்ணிலடங்கா நல்ல காரியங்களுக்கு அவரது இசை வித்திட்டது என்றால் அது மிகையாகாது. ஆனால், செய்த தானதருமங்கள் வெளியில் தெரியாவண்ணம் அவர் நடந்து கொண்டது தான் அவரை பலரிடமிருந்தும் தனித்து நிறுத்துகிறது. ஐ.நா. சபை வரை தன் இசையை கொண்டு சென்ற அவர், தான் ஈட்டியதில் பெரும்பங்கை பல தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்கியதால், ஒரு முறை, வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை பலர் அறிந்திருக்க மாட்டார்.அவர் வாங்கிய விருதுகள் தான் எத்தனை? வாங்கிய விருதுகளுக்கே பெருமை சேர்த்தவர் அந்த இசை மாமேதை! சிலவற்றை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

1. செம்மங்ககுடியும், ராஜமாணிக்கம்பிள்ளையும் வழங்கிய 'இசைவாணி' பட்டம் - 1940
2. பத்மபூஷன் விருது - 1954
3. சங்கீத கலாநிதி விருது - 1968
4. தில்லி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் - 1973
5. ராமோன் மக்ஸாஸே விருது - 1974
6. பத்மவிபூஷன் விருது - 1975
7. தமிழ்நாடு இசை இயல் நாடக மன்றத்தின் தனிப்பெரும்கலைஞர் விருது - 1980
8. தேச ஒற்றுமைக்கான இந்திராகாந்தி விருது - 1990
9. சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி விருது - 1997
10. அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் பாரத ரத்னா விருது - 1998

கானப்பெருங்குயில் ஒன்று படைத்தவனைக் காண இப்பூவுலகை விட்டு சென்று விட்டது. இன்னும் பல தலைமுறைகள் அவரது "கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா' வை கேட்ட வண்ணம் விடியலைத் தொடங்கும் என்பதில் ஐயமில்லை! இன்னும் பல நூற்றாண்டுகள், பல கோடி மாந்தர் MS-இன் மீராபஜனையும், 'ஹே கோவிந்தா, ஹே கோபாலா!' வையும் கேட்டு கண்ணீர் சிந்தவும், அவரது 'வைஷ்ணவ ஜனதோ'வை கேட்டு மனஅமைதி பெறவும் செய்வர் என்பதிலும் ஐயமில்லை!
என்றென்றும் அன்புடன்

பாலா
தேசிக அனுபவம்

ஆறு வருடங்களுக்கு முன் நான் புதுமணமானவனாக இருந்த சமயத்தில் நடந்த நிகழ்ச்சி அது. எனக்கும் கர்னாடக சங்கீதத்திற்கும் பரிச்சயம் சற்று குறைவு தான். ஆனால், என் மனைவி கர்னாடக சங்கீதத்தை அவரது குரு திருமதி ராதா விஸ்வநாதனிடம் (MS அவர்களின் மகள்) 18 வருடங்கள் முறைப்படி கற்றவர்.ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் என் மனைவியை இசை பயிலக் கூட்டிச் செல்வது என் முக்கிய அலுவல்களில் ஒன்று! ஒரு இனிய மதியத்தில் கிளாஸ் முடியும் தறுவாயில், MS தன் மகளின் வீட்டிற்குள் நுழைந்தார்! முதன்முதலாக அவரை நேரில் பார்த்தேன்! அந்த இசை மாமேதையின் முன் உட்கார மனமில்லாமல், நான் எழுந்து நின்று விட்டேன். பிறகு, தரையில் அமர எத்தனித்த என்னை MS தன் அருகில் இருந்த இருக்கையில் அமருமாறு கூறி விட்டு என் மனைவியை பாடுமாறு பணித்தார்.


என் மனைவி மிகுந்த தைரியத்துடன், MS ஏற்கனவே அற்புதமாக பாடியிருந்த சூர்தாஸின் ஒரு பஜன்-ஐ பாடிக் காட்டினார்! அதை முழுவதும் கேட்டு ரசித்துப் பாராட்டினார் MS! அந்த இசை சகாப்தத்தின் அருகில் அமர்ந்திருந்த அக்கணங்களில், என் மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது கடினம்! அவரிடம் விடைபெறுவதற்கு முன், அவர் பாதம் தொட்டு வணங்கி ஆசிகள் பெற்றுக் கொண்டோ ம். அப்பேர்பட்டவர், எங்களை தன் இல்லத்திற்கு ஒரு முறை வரும்படியும் கேட்டுக் கொண்டார்.


ஆறு ஆண்டுகளுக்குப் பின், நேற்று காலை, அவர் காலமாகி விட்ட சேதி அறிந்து மனம் கலங்கி அழுதேன்.


--- Desikan

2 மறுமொழிகள்:

Desikan said...

மிகவும் அற்புதமான பதிவு. இரண்டு முறை படித்தேன். என் அனுபவத்தை நானே எழுதியிருந்தாலும், இப்படி எழுதியிருப்பேனா என்று சந்தேகம்தான் ;-)
தேசிகன்

Babu said...

அருமையான பதிவு

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails